நடிகை மைனா நந்தினி என்று நினைத்து, அரசியல் பிரமுகருக்கு தொடர்ந்து போன் செய்து, சிலர் தொந்தரவு கொடுத்ததால் தற்போது அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர், நடிகைகள் பெயரில் போலி சமூக வலைதள பக்கங்கள் மற்றும் முகநூல் பக்கங்கள் அதிக அளவில் உலா வருகிறது. அந்த வகையில், வம்சம், படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பிரபலமான நடிகை மைனாவின் பெயரில் மர்ம நபர் ஒருவர் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் மைனா நந்தினியின் எண் என்று கூறி, பிரபல சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதரின் தொலைபேசி எண்ணை இணைத்துள்ளார்.

இதனால்,  அவருக்கு தினமும் இரவு 10 மணிக்கு மேல் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குருநாதனை மைனா நந்தினி என்று நினைத்து, பேசுவது, யார் என்று கூட கேட்காமல் அழகாய் இருக்கிறீர்கள் என வர்ணித்தும், நன்றாக நடிப்பதாகவும் பேசியுள்ளனர். இன்னும் சிலர் ஆபாச வார்த்தைகளை அல்லி தெரித்துள்ளனர்.

ஒரு நிலையில் பொறுமை இழந்த குருநாதன், இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க முடிவெடுத்தார். அதன் படி தற்போது அவர் அந்தியூர் காவல் நிலையத்தில், தனக்கு வரும் ஆபாச அழைப்புகள் பற்றி புகார் கொடுத்துள்ளதோடு, போலி முகநூல்  பக்கத்தில் இருந்து தன்னுடைய தொலைபேசி எண்ணை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  

இந்த புகாரின் மீது தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.