ராஜ்யமா..? இமயமா..? என்கிற குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த் இப்போது ராஜ்ஜியத்தின் பக்கம் பயணத்தை தொடங்க முடிவெடுத்து விட்டார்.  ஆனாலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். 

ரஜினி நடிக்க இருக்கும் கடைசி படம் எது  என்கிற கேள்வி அவர் அரசியலுக்கு வருவதால் அவரது ரசிகர்களுக்கே எழுந்துள்ளது. இந்நிலையில், சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்தால் தன் கடைசி படம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் அமைய வேண்டும் என்று விரும்பபுகிறாராம் ரஜினி. ராஜமவுலியும் ரஜினியின் பரம ரசிகரே.

பாகுபலி போன்ற படத்தில் ரஜினி நடித்திருந்தால் கதையே வேறு என்று சினிமாக்காரர்களே சொக்கிப் போனதுண்டு.  அந்த ஏக்கத்தை போக்க இருவரும் இணைய முடிவெடுத்து விட்டார்களாம். இது பாகுபலியா? அதற்கு மேலான மாஸ் படமா எப்படி அமையப்போகிறது என்பது இப்போது தெரியாது. சந்திப்புகள் முடிந்து இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துவங்கிவிட்டாராம் எஸ்.எஸ்.ராஜமவுலி. தென்னிந்தியாவே திகைக்கிற அளவுக்கு பிரமாண்ட படமாக யோசித்து வருகிறாராம். அநேகமாக இந்தப்படத்தின் தயாரிப்பாளர் தமிழரல்ல, தெலுங்கராக இருக்கலாம் என்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த படம் துவங்கப்படவே வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். காரணம் ராஜமவுலி ஒரு படத்தை இயக்க பல நாட்கள் எடுத்துக் கொள்வார். ரஜினி அரசியலுக்கு வர இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என்கிறார்கள். ராஜ்யமா? இமயமா? என்கிற குழப்பத்தில் இருந்து மீண்ட ரஜினி, இப்போது, ராஜ்ஜியமா? இல்லை ராஜமவுலியா என்கிற குழப்பத்தில் மூழ்கி விட்டார் என்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதோ?