கடந்த மூன்று தினங்களாக முகநூல், ட்விட்டர் பக்கங்களில் மகா மட்டரகமான ஒரு ஜாதி சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது. ‘தேவராட்டம்’ படம் வசூலில் சற்று சுமாருக்கும் கீழே இருப்பதால் இச்சண்டைகளைப் படத்தின் தயாரிப்பாளரே ஏவி விட்டு வேடிக்கை பார்ப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 படங்களாக தொடர்ந்து சாதிப் பெருமை பேசும் படங்களாகவே எடுக்கிறார் இயக்குநர் முத்தையா என்று குற்றம் சுமத்தப்பட்ட ‘தேவராட்டம்’ கடந்த 1ம் தேதியன்று ரிலீஸானது. விமர்சன ரீதியாகப் பரவாயில்லை என்று சொல்லப்பட்ட இப்படம் கவுதம் கார்த்திக்கு இருக்கும் டல்லான மார்க்கெட்டால் சுமாரான வசூலைக் கூட எட்டவில்லை.

இந்நிலையில் சில முத்தையா ஆதரவு சாதிப்பற்றாளர்கள் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எப்படி  தலித் ஆதரவுப் படங்கள் எடுத்து உணர்ச்சியைத் தூண்டி, சாதி ஒன்றிணைதலை ஊக்குவித்து அதை வியாபாரம் செய்து கஞ்சி குடிக்க உரிமை இருக்கிறதோ, அதே உரிமை முத்தையாவிற்கும் இருக்கிறது...என்று பதிவுகள் போட ஆரம்பித்தார்கள்.

உண்மையில் இந்த மாதிரியான சண்டைகளை இப்படத்தின் விழாவில் துவக்கிவைத்தவரே படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவேதான். ’பா. ரஞ்சித் அண்ணனை வைத்து அட்டக்கத்தி படம் எடுத்தபோது அவர் அவரது வாழ்வியலைச் சொன்னார். அதே போல் முத்தையாவும்...’ என்று அவர் கோடுபோட இன்று பலரும் அவர் வழியில் ரோடு போட ஆரம்பித்திருக்கிறார்கள்.