பரங்கிமலை ஜோதி தியேட்டரில் 11 மணிக் காட்சிக்கு கல்லூரியைக் கட் அடித்துவிட்டு ஷகீலா படம் பார்த்த ‘80ஸ்கிட்ஸ்’ கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிற ரகமான செய்திதான் இது. யெஸ் உங்க ஷகீலாவோட படம் ஒன்று சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொள்ளவிருக்கிறது.

’நான் ஒரு திறந்த புத்தகம் என்று எத்தனையோ நடிகைகள் பேட்டி அளித்திருக்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மையின் பக்கத்தில் இருந்தவர் என்றால் அது நடிகை ஷகீலாதான். ‘80ல் துவங்கி 90 களின் துவக்கம் வரை தமிழ், மலையாள ரசிகர்களின் தூக்கத்தை தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்தவர் ஷகீலா...

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த அப்படியாகப்பட்ட  ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி முடித்து தற்போது ரிலீஸுக்கும் தயாராகிவிட்டார்.திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த அப்படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் தலையில் துண்டு போட்டுக்கொண்டு பக்கத்து சீட் ஆசாமி கூட நம்மைப் பார்த்துவிடக்கூடாது என்று ரகசியமாகப் பார்த்த ஷகீலாவின் படத்தை இனி சர்வதேசப் பட விழாக்களில் பார்க்கலாம்.