வாடகை காரில் பயணித்த  நடிகை பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் குறித்து பார்வதி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால், உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பும்போதும், அவர்கள் பாதுகாப்பில் தயாரிப்பாளர்கள் அக்கறை எடுக்க வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாதவர்களை டிரைவர்களாக அனுப்பக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில் நடிகை பார்வதி நாயரும் சென்னையில் வாடகை காரில் பயணித்தபோது, தொல்லைகள் அனுபவித்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். பார்வதியின் இந்த பதிவால்  பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக இணையதளங்களில் தகவல் தீயாக பரவியது.

இந்த அதிர்ச்சி செய்தியால் நடிகர்-நடிகைகள் பலரும் பார்வதி நாயரை தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். பாலியல் தொல்லை குறித்து வெளியான தகவலுக்கு பார்வதி நாயர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இதில், “எனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டது என்பது தவறான செய்தி. டிரைவர் மரியாதை இல்லாமல் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஜி.பி.எஸ். தவறாக காட்டியதால் தவறான வழியில் சென்றார். அவர் என்னிடம் தவறாக நடக்கவில்லை. எனவே வதந்தியை பரப்ப வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.