இன்றைய தமிழகத்தின் பரபரப்பான செய்தியாகியிருக்கும் அஜீத், பா.ஜ.கவின் பஞ்சாயத்துக்குப் பின்னால் இருப்பது நடிகர் விஜய் குடும்பத்து வி.ஐ.பி. ஒருவர்தான் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

நடிகர் விஜய்யின் துவக்க காலம் தொட்டே அவருடைய மக்கள் தொடர்பாளராகவும், குடும்ப விசுவாசியாகவும் இருந்தவர் பி.டி.செல்வக்குமார். கூடவே தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நடுவே மீடியேட்டராகவும் வலம் வந்த இவரை விஜய் தயாரிப்பாளராகவும் உயர்த்தி, ‘புலி’ படத்திற்கு கால்ஷீட்டும் கொடுத்தார்.

விஜயின் நிழலில் பெரும் செல்வந்தராக உயர்ந்த செல்வக்குமாருக்கு அரசியல் ஆசை வரவே தன்னை பி.ஜே.பியில் இணைத்துக்கொண்டு, ஏற்கனவே திருமணமானவர்களுக்கு மறுபடியும் இலவசத் திருமணம் செய்து வைப்பது, கஜா புயல் போன்ற சமயங்களில் ஆடு,மாடுகளை பரிசளிப்பது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

இவரது பி.ஜே.பி. எண்ட்ரியை விரும்பாத விஜய் சிலதினங்களுக்கு முன்பு , தொலைக்காட்சி விவாதங்களில் தன்னை தேவையில்லாத வம்புகளில் மாட்டிவிடுவதாகக் கூறி நிரந்தரமாகக் கழட்டிவிட்டார். இந்நிலையில் கட்சியில் இன்னும் அழுத்தமாக தனது முத்திரையைப் பதிக்க விரும்பிய செல்வக்குமார் தனக்குத் தெரிந்த சில விஜய் ரசிகர்களையே அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் தமிழிசையிடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.  

பத்து வருடமாக மவுனியாக இருக்கும் அஜீத் இந்த சின்ன மேட்டருக்கா வாயைத்திறக்கப்போகிறார் என்ற நம்பிக்கையில் செல்வக்குமார் செய்த அந்தக் காரியத்தால் தற்போது பா.ஜ.க.வே தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.