திரைப்படத்துறையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, தயாரிப்பாளர்கள் சிலர் தம்மை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பிரபல தமிழ் நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.   தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, பல முன்னணி பிரபலங்களின் பெயரையும் வெளியிட்டு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இந்நிலையில், தாமும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுபவித்துள்ளதாக, மற்றொரு பிரபல நடிகையான ஆமனி எனும் மீனாட்சி கூறியுள்ளது, தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகில் மேலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 
முரளி நடித்த புதிய காற்று படத்தில் அறிமுகமாகி, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட நடிகை ஆமனி. தமிழ் ரசிகர்களுக்கு இவரை மீனாட்சி என்று கூறினால் தான் நினைவிற்கு வரும். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து, புகழடைந்தார். விஜயகாந்த், மம்முட்டி உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்த அவர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த அவர், குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் மீண்டும் நடிக்க வந்தார்.

 இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த மீனாட்சி, இளமை காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, சில தயாரிப்பாளர்கள் தம்மை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்லும்போது, தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சிலர், மற்றொரு நாளில் வருமாறு கூறி  தொலைபேசி எண்ணை வாங்கிக் கொள்வார்கள் என்றும், அதன் பிறகு என்றாவது ஒருநாள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபல ஓட்டல் அறைக்கு உடனே வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
   
 அவர்களின் நோக்கத்தை தெரிந்துகொண்டு, அங்கு தான் செல்வதை தவிர்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.  ஒரு சில நேரங்களில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செல்லும்போது, அங்கேயே சிலர்  ஒரே ஒரு நாள் உடன் படுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்பார்கள் என்று மீனாட்சி தெரிவித்துள்ளார். ஒரு சில நடிகர்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சியுள்ளதாகவும், சில நடிகர்கள் மிரட்டியுள்ளதாகவும் மீனாட்சி ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

 தம்மிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், தம்மை உரசுவதும் நடைபெற்றுள்ளதாக விவரித்த அவர், ஆனாலும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரபல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோல் ஒருபோதும் தம்மிடம் நடந்து கொண்டதில்லை என்றும் சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் மீனாட்சி.   அதேபோல், தொடக்க காலத்தில் பிரபலமாகாத சில நடிகர்களும் தம்மை பாலியல் ரீதியாக அணுகி, படுக்கைக்கு அழைத்திருப்பதாக நடிகை மீனாட்சி கூறியிருப்பது, தெலுங்கு பட உலகில் மீண்டும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று தமிழ் திரையுலகிலும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் படுக்கைக்கு அழைத்ததாகவும் மீனாட்சி கூறியுள்ளார்.