பழம்பெரும் நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான தெலுங்கு படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அன்னபூர்ணா. இவரின் மகள் கீர்த்தி. இவர் கடந்த 2013ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், அந்த குழந்தை வாய் பேச முடியாத ஊமையாக இருந்துள்ளது.

இதன் காரணமாக, கீர்த்திக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதன்பேரில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். கீர்த்தி ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசிக்க, அவரது கணவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் , கீர்த்தியுடன்தான் உள்ளார்.

மகளின் குறைபாடு காரணமாக மிகவும் மன அழுத்தத்தில் காணப்பட்ட கீர்த்தி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் உள்ள மின்விசிறியில் அவர் துப்பட்டாவை மாட்டி இப்படி செய்துள்ளார்.

இதுபற்றி பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், மகளின் இயலாமை காரணமாகவே, கீர்த்தி தற்கொலை செய்துகொண்டதாக, தெரியவந்துள்ளது. எனினும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக, போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.