தான் கர்ப்பமாக இருப்பதாகக் கருதி வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகள் பகிர்ந்து வரும் நபர்களுக்கு கடும் கோபத்துடன் பதில் அளித்து வருகிறார் முன்னணி இந்தி நடிகையான தீபிகா படுகோனே.

இந்தியில் 'ராம்லீலா’, ’பாஜிராவ் மஸ்தானி’, ’பத்மாவதி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து  நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடமாகக் காதலித்து கடந்த ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.

வயிறு பெரிதாக இருப்பதாக நம்பப்பட்ட அந்த  வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல. திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எப்போது நடக்கவேண்டுமோ அப்போது  நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை” என்றார்.

தீபிகா படுகோனே தற்போது டெல்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் லட்சுமி அகர்வாலாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ’சபாக்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனேவின் முதல் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.