Asianet News TamilAsianet News Tamil

"என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்".. ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழா - நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!

Karthi 25 Event : பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

thanks for the directors who molded me actor karthi emotional speech in japan movie event ans
Author
First Published Oct 29, 2023, 9:02 PM IST

கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. 

இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என, இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது.

Sri Divya: என்னுடைய திருமணம் இவருடன் தான்! பட வாய்ப்பு கிடைக்காததால் கல்யாணத்துக்கு தயாரான நடிகை ஸ்ரீ திவ்யா!

இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ்.ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், சுராஜ்,, சத்யராஜ், சிபிராஜ், இயக்குனர் சதீஷ், ஜித்தன் ரமேஷ், சக்திவேலன், தயாரிப்பாளர்கள் லட்சுமன், கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், பொன்வண்ணன், பவா செல்லத்துரை, அனல் அரசு, பாண்டியன் மாஸ்டர், திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் நந்தா, இயக்குனர் R. ரவிக்குமார், தயாரிப்பாளார் T. G தியாகராஜன், இயக்குனர் தமிழ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Japan

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை  எனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. 

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்

இந்த விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில், “விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது.  ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..

இந்த நிகழ்வில்  தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..

இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.

மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.. வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என நம் நாயகன் கார்த்தி அவர்கள் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன்.

இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். இந்த சமூக செயற்பாட்டாளர்களை கண்டறிந்து உதவிய இ.ரா சரவணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நடிகர் சூர்யா பேசும்போது, “ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றி கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் இருபது வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குனர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.

நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்துசக்தியாக ரசிகர்கள் நீங்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பலபேர் சொல்வதுண்டு. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன். 

அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அவரது 25வது படத்தை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார். 

தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்திற்காக தங்களது கடின உழைப்பையும் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்தி அண்ணாவின் 25-வது திரைப்படத்தை தயாரித்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்பதுடன் எங்களது முதல் திரைப்படத்தையும் கூட அவரை வைத்தே தயாரித்து இருக்கிறோம். எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் அவர் என்னை உற்சாகப்படுத்துவார். இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் திரைப்படம் குடும்பங்களுடன் பொழுதுபோக்க சிறந்த படமாக இருக்கும்” என்றார். 

பவா செல்லத்துரை பேசும்போது, “இந்த சிறந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நான் இயக்குநர் ராஜு முருகனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜூ முருகன், ரவிவர்மன் போன்ற திறமையாளர்களுடன் பணியாற்றியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், கார்த்தியின் அர்ப்பணிப்பு ரொம்பவே உன்னதமாக இருந்தது. அதை ரசிகர்கள் வெள்ளித் திரையில் நிச்சயம் பார்ப்பார்கள்” என்றார்.

நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது, “இந்த படம் கார்த்திக்கு சிறப்பான வெற்றிப்படமாக அமையப் போகிறது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருக்கும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக நன்றி சொல்கிறேன். இந்த படத்தைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் ஜப்பான் பட வெற்றி சந்திப்பின்போது பகிர்ந்து கொள்கிறேன். ஒட்டு மொத்த ஆதரவை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவிற்கு எனது நன்றி” என்று கூறினார்.

நாயகி அனு இம்மானுவேல் பேசும்போது, “25 படங்கள் நடித்த கார்த்தியின் மிகப்பெரிய வெற்றிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களிலிருந்து ஜப்பான் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மேனரிசங்கள் மற்றும் உடல் மொழியுடன் அவர் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வசன உச்சரிப்பை வழங்கி இருக்கிறார். படப்பிடிப்பின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அவர் என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக இயக்குனர் ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது, “கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்று கூறினார்.

இயக்குனர் ராஜேஜூ முருகன் பேசும்போது, “ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி சார் என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பருத்திவீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த பட குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.

நடிகர் வாகை சந்திரசேகர் பேசும்போது, “சூர்யாவுடனும் இப்போது கார்த்தியுடனும் இணைந்து பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் எல்லோருக்கும் சிவகுமார் சார் ஒரு கூகுள் ஆக இருந்தார். அந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஏதாவது சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாங்கள் அவரை தான் கேட்போம். இந்த தீபாவளியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் பட்டாசாக மாறும். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ராஜூ முருகனுக்கு நன்றி” என்று கூறினார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “கார்த்தி ஒரு நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட. நடிப்புக்கு அப்பால் அவர் திரைப்படங்களில் தன்னை ரொம்பவே ஈடுபடுத்திக் கொள்கிறார். மேலும் நடிகர் சங்கத்தின் பெருமைகளை உயர்த்தும் விதமாக மிகுந்த முயற்சியும் எடுத்து வருகிறார்” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, ‘நான் லட்சுமன் மற்றும் கார்த்தி அனைவருமே பள்ளிக்கால நண்பர்கள். எங்களது பள்ளி நாட்களில் நாங்கள் சினிமாவிற்குள் நுழைவது பற்றி கற்பனையாக பேசிக் கொள்வோம். ஆனால் கடவுளின் கருணையால் அது நிஜமாகவே ஆகிவிட்டது. கார்த்திக்கு எப்போதுமே நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவரால் டென்ஷனை தவிர்க்க முடியும் என்பதும் தான். வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை விட்டு போகும்போது அவற்றை ஜாலியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் படத்தின் டிரைலரில் அவர் சொல்வதைப் போல அதே தத்துவத்தை அவர் தனது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பிளாக் பஸ்டர் பொழுதுபோக்கு படமாக அமையும்” என்று கூறினார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமன் பேசும்போது கார்த்தி குழந்தைப்பருவத்தில் இருந்து எனது நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். நான் ஐடி துறையில் இருந்தபோது கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் தான் என்னை சினிமாவில் நுழைவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் இருவருமே என்னுடன் அழகான பிணைப்பை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் இப்போது சர்தார் -2வுக்காக தயாராகி வருகிறோம். அது எல்லோருக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகை தமன்னா பேசும்போது, “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்த இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “மெட்ராஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி சார் சரியாக பொருந்தியிருந்தார். இதற்காக நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள். இப்போது ஜப்பான் திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். மொத்த குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘கார்த்தி சார் எப்போதுமே சினிமாவை பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. அதுமட்டுமல்ல அதுபற்றிய மிகப்பெரிய அறிவையும் அவர் கொண்டுள்ளார். ராஜூ முருகன் சாரிடம் இருந்து ஜப்பான் போன்ற ஒரு ஆச்சரியமான விருந்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. ராஜூ முருகனுக்கும் கார்த்தி சாருக்கும் ஜப்பான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

சக்தி பிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்து இருக்கிறார். அதில் 18 படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கின்றன. சிவாஜி கணேசன் சார் தான், தனது முதல் படமான பராசக்தியிலேயே தான் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தவர். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்தில் நடித்த கார்த்திக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல ஐந்து வருடங்களில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகர் யாரென்றால் அது கார்த்தி மட்டுமே. பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் அவர் வேறுவித வடிவம் பெற்றார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கஜினி ஆகிய படங்கள் தான் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் மொழிமாற்று படங்களில் ஒரு புதிய டிரென்டை உருவாக்கின” என்றார்.

இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசும்போது, “கார்த்தி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை கொண்டு என்னை வசீகரித்ததன் மூலம் நான் ஒரு முழுமையான இயக்குனராக மாறினேன். எந்த நேரமும் சினிமா பற்றியே யோசித்துக் கொண்டு இருக்க கூடிய நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.

இயக்குநர் முத்தையா பேசும்போது, “பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததுடன் அந்த படத்தில் அழகான மதுரை பாஷையில் கார்த்தி சார் பேசியிருந்தது ரசிருப்பதாக இருந்தது. கொம்பன் படத்திற்காக அவரை அணுகியபோது நான் அவரிடம் ராமநாதபுரம் வித்தியாசமான ஒரு பாஷையை கொண்டது என கூறினேன். அவரும் அதற்கேற்ற மாதிரி தன்னை தயார் செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.

இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது, “என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார். அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் பேசும்போது, “என்னை கார்த்தியிடம் சிவக்குமார் சார் அறிமுகப்படுத்திபோது அவர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் இருந்தார். அவருக்கு எப்படி நான் பயிற்சி கொடுக்க போகிறேன் என்பது அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், சூர்யா சாரிடம் இருந்து கிடைத்த உற்சாகப்படுத்தலும் கூடுதல் கருவிகளாக அமைந்து விட்டன” என்றார்.

thanks for the directors who molded me actor karthi emotional speech in japan movie event ans

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது, ‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார். 

கார்த்தி NO சொன்ன கதை.. "யோசிக்காம நடித்து மொக்கை வாங்கினேன்".. ஆர்யா சொன்ன தகவல்!.. எந்த படமா இருக்கும்?

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ‘கார்த்தியின் 25வது பட விழாவான இந்த அழகிய நிகழ்வில் இங்கே இடம்பெற்று இருப்பது மிகச்சிறப்பான ஒன்று. கார்த்திக்கும் இயக்குனர் ராஜூ முருகனுக்கும் ஜப்பான் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமர்சியலாக மட்டுமல்லாமல் கலை சார்ந்த படைப்புகளிலும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஒரு விதிவிலக்கான நடிகர் கார்த்தி. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகமானதாக இருந்தது. சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்காக நிறைய உதவிகளை செய்து சமூக கடமை ஆற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

Follow Us:
Download App:
  • android
  • ios