ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில், ஜார்ஜியாவில் இருந்து தமிழகம் திரும்பிய விஜய் சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. அதன் பின்னர் தற்போது 'தளபதி 65' பட ஷூட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் இயக்குறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் தளபதி 65 படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருந்த விஜய் வாக்களித்த மறுநாளே ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்து சென்றார். முக்கிய காட்சிகளை ரஷ்யாவில் படமாக்க திட்டமிருந்த படக்குழு நேற்று வரை ஜார்ஜியாவில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ஜார்ஜியாவில் கடும் குளிர் மற்றும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் தளபதி 65 படக்குழுவினர் ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில், ஜார்ஜியாவில் இருந்து தமிழகம் திரும்பிய விஜய் சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கறுப்பு கலர் கூலிங் கிளாஸ், மாஸ்க் அணிந்து, தன்னை யார் என்றே ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளாத படி விஜய் வேக, வேகமாக விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய காரை நோக்கி முன்னேறும் வீடியோவை சோசியல் மீடியாக்களில் விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...
