லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஜனவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ம் தேதி இந்தியில் விஜய் தி மாஸ்டர் என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. 


தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் மாலையில் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு வருகிறது. ட்ரெய்லர் இல்லை என்பதால், தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக இந்தப் படத்தை தயாரித்துள்ள  சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் (seven screen studio) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து 29 இணைய தள  சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், திடீரென்று இன்று (ஜனவரி 11) மாலையில் 'மாஸ்டர்' காட்சிகள் இணையத்தில் லீக்கானது. அதில் காரில் நாசருடன் விஜய் பேசிக் கொண்டு வரும் காட்சியும், அர்ஜுன் தாஸுடன் விஜய் சட்டையின்றி அமர்ந்து பேசி வரும் காட்சியும் வெளியாகியுள்ளது. எங்கிருந்து, எப்படி லீக்கானது என்று படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டில் திரையிடப்பட்ட விநியோகஸ்தர்கள் காட்சியிலிருந்து லீக்காகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் உழைப்பு, எங்களிடம் இருப்பது நீங்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டுமே. திரைப்படத்திலிருந்து கசிந்த கிளிப்களை நீங்கள் கண்டால், தயவுசெய்து அதைப் பகிர வேண்டாம்  என கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம் நன்றி.   இன்னும் ஒரு நாள் மட்டுமே மாஸ்டர் உங்களுடையது என பதிவிட்டுள்ளார்.