நடிகர் விஜய்க்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிக்க முயன்றது கோலிவுட்டிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  உடனடியாக முந்திக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நான் தான் கட்சியை பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறேன். அதற்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையிலோ,  தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும்,  அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது என்றும் கட்டளை விடுத்தார். அதுமட்டுமின்றி தனது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அப்பாவுக்கே எச்சரிக்கை விடுத்தார் விஜய். அதுமட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தில் அப்பா எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை களையெடுக்கும் வேலையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். 

 

தற்போது மீண்டும்  விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்தாக தகவல்கள் வெளியாகின. அதன்படி 'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்' என புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், நமது இயக்கத்தின் அதிகாரப்பூர்வ மாவட்ட தலைவர்கள் இளைஞரணி தலைவர்கள் தொண்டரணி தலைவர்கள் மாணவரணி தலைவர்கள், மகளிர் அணி தலைவிகள், விவாசாய அணி தலைவர்கள், மீனவர் அணி தலைவர்கள், வழக்கறிஞர் அணி தலைவர்கள் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பெரும் மகிழ்ச்சியோடு இந்த அறிக்கையின் மூலம் அறிவிக்கின்றேன்.  

மேற்கண்ட அணிகளின் தலைவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதோடு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதி கிளை மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், ரசிகைகள் அனைவரும் மாவட்ட தலைவர்களின் ஆலோசனைபடி செயல்பட்டு நம் மக்கள் இயக்கத்தை மென்மேலும் சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் புகைப்படும், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளும் மாநில, மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் அணித்தலைவர்களின் அனுமதி பெற்று பயன்படுத்தவேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.