விஜய் - லோகேஷ் இணையும் முதல் படம் என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு படம் தொடர்பான அறிவிப்பு வந்தவுடனேயே எகிறிவிட்டது.
இந்தப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். 


வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கிறார். மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தளபதி-64 படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் 2-வது கட்ட ஷுட்டிங், கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் முதல் ஹீரோயின் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும், '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் 'தளபதி-64' படத்துக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாங்களே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். 


இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீமனும், தளபதி-64 படக்குழுவில் இணைந்துள்ளார். டெல்லியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் அவர், இன்று முதல் பங்கேற்றுள்ளார். இப்படி, வரிசையாக நட்சத்திரங்கள் 'தளபதி-64' ஷுட்டிங்கில் இணைந்து வருவதால், தலைநகரமே நட்சத்திரங்களின் ஒளியில் ஜொலிக்கிறது.


கடும் காற்று மாசால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள போதிலும், 'தளபதி-64' ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, 120 நாட்களுக்கு முன்பாகவே முடித்துக்கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 

அதற்கு காரணம், தன்னுடைய கால்ஷீட் முழுவதையும் 'தளபதி-64'க்காக கொடுத்துவிட்டாராம் விஜய். எல்லாம், லோகேஷ் கனகராஜின் வேகத்தை கண்டுதானாம்.! 
மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் 'தளபதி-64' படத்தில் இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.