ரூ 6 கோடி பட்ஜெட்டில் தளபதி 63’ படத்துக்கு செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துவரும் ஃபிலிம் சிட்டியில் போலீஸார் புகுந்து விசாரணை நடத்தியதில் பல குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றிலிருந்த ராட்சத விளக்கு  விழுந்ததில், செல்வராஜ்   என்ற  எலெக்ட்ரிஷியன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர்  அருகிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து எலெக்ட்ரிஷியன் செல்வத்தை நேரில் சென்று நலம் விசாரித்தார் நடிகர் விஜய். 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் விபத்து நடந்த ஈவிபி பிலிம் சிட்டியை நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், ஈவிபி பிலிம் சிட்டி பல்வேறு உள்ளரங்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றிற்கு அனுமதி அளித்து வருகிறது.ஆனால் அப்படி  அனுமதி வழங்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளைச் சரிவரப் பின்பற்றாத காரணத்தினால் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. 

மேலும் தளபதி 63 படப்பிடிப்பின் போது,  தீயணைப்பு வாகனம் மாற்றம் தீத்தடுப்பு உபகரணங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவம் முதலுதவி குழு செயல்படவில்லை என்று போலீசார் குற்றச்சாட்டியுள்ளனர்.  கிரேன்,  தற்காலிக கால்பந்து மைதானம் அமைக்கச்  சம்பந்தப்பட்ட துறையிடமும் மற்றும் காவல்துறையிடமும் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் அதிர்ச்சி தகவலை போலீஸார் கூறியுள்ளனர்.

இதனால் ஈவிபி பிலிம் சிட்டி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பு எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையால் அடிவயிறு கலங்கிப்போயிருக்கும் படக்குழு 6 கோடிக்குப் போடப்பட்ட செட்டில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போய்விடுமோ என்று கதிகலங்கிப்போயுள்ளனர்.