’தளபதி 63’படத்தின் கதையையே யூகித்து விடக்கூடிய அளவுக்கு அபாயகரமான புகைப்படம் ஒன்று வலைதளங்களில் ரிலீஸாகி வைரலாகியிருப்பதால் நடிகர் விஜயும் இயக்குநர் அட்லியும் செம டென்சனுக்கு ஆளாகியுள்ளனர்.

சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பைக் கடந்துள்ள ‘தளபதி 63’ படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி சீரழிந்து வருகிறது. முதலில் கதைத் திருட்டு, அடுத்து படப்பிடிப்புத் தளங்களில் ரசிகர்கள் மீது போலீஸ் லத்தி சார்ஜ், அடுத்தடுத்து விபத்துகள், சில தினங்களுக்கு செட்டில் தீப்பற்றியது என்று இப்படத்தை துயரச்செய்திகள் விடாமல் துரத்துகிறது.

இது தொடர்பாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் ‘வதந்திகளை நம்பாதீர்கள். ரசிகர்களின் எண்ணத்தை மனதில் வைத்து தரமாக படத்தை உருவாக்கி வருகிறோம்’ என்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்புக் குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சக்கர நாற்காலி ஒன்றில் விஜய் அமர்ந்து தனது மாணவிகள் கால் பந்து ஆடுவதை வேடிக்கை பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சும்மாவே படத்தின் கதை குறித்து கதை விடும் மீடியா அண்ணன்களின் கற்பனைகளுக்குப் பேருதவியாக இந்த ஸ்டில் அமைந்திருப்பதால்...வில்லன்களால் தாக்கப்பட்டு வீல் சேரில் அமரும் நிலைக்கு வரும் விஜய் எப்படி வீறுகொண்டு எழுந்தார் என்று ஏழெட்டுக் கதைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.