ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் ஒரே மூச்சாக நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தலைவரோட சுறுசுறுப்பு யாருக்கும் வராது என இளம் தலைமுறை ஹீரோக்களே வாய் பிளக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். 

மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். "தலைவர் 168" படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் குஷ்பூ வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், "தலைவர் 168" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் மீனாவுடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

'எஜமான்' படத்தில் பார்த்த அதே மீனாவை நினைவுபடுத்தும் வகையில் மங்களகரமாக இருக்கும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. கழுத்து நிறைய நகை, பட்டுப் புடவையில் பளபளவென ஜொலிக்கும் மீனாவை ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் ரசித்து வருகின்றனர்.