’நிச்சய தோல்வி!’ என்று ஷூட்டிங் துவங்கும் முன்பே கரித்துக் கொட்டப்பட்ட அஜித்தின் ’விஸ்வாசம்!’ விண்ணதிர வெற்றி பெற்றிருக்கிறது. மேக்கிங்கிலும், தொழில்நுட்பத்திலும், பில்ட் அப்களிலும் உச்சத்தின் உச்சம் தொட்ட பாகுபலி (1 & 2), 2.0, சர்கார் ஆகியவற்றின் சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் ஆக அடிச்சு தூக்கி இருக்கிறது! என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். 

இத்தனைக்கும் அஜித், நயன்தாரா எனும் இரண்டே இரண்டு மெகா நட்சத்திரங்கள் மட்டுமே படத்தின் நம்பிக்கை. ஆனாலும் வெவ்வேற லெவல் வெறித்தனமான ஹிட்டை தொட்டிருக்கிறது படம். ‘சொதப்பிடுவாய்ங்க போல!’ என்று அஜித் ரசிகர்களாலேயே வருத்தத்துடன் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் படம் அடித்து நொறுக்கிய நெகடீவ் செண்டிமெண்டுகளை கொஞ்சம் வரிசை கட்டி பார்ப்போமா?....

* ஒரே இயக்குநருடன் ஒரு ஹீரோ தொடர்ச்சியாக செய்யும் நான்காவது படம் வெல்வதில்லை! அதிலும் மூன்றாவது படத்திலேயே மண்ணை கவ்வியவர்களான சிவாவும் - அஜித்தும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஃபிளாப்தான்!

* ஜெகதிபாபு நடிக்கும் தமிழ்ப்படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை. அதிலும் மாஸ் ஹீரோக்களுடன் அவர் இணைந்தால்  அந்தப் படம் நிச்சய தோல்விதான். லிங்கா, பைரவா, தாண்டவம்...இப்படி. அந்த வகையில் அஜித்துடன் ஜெகதி இணையும் இந்தப் படம் நிச்சய தோல்வியே. 

* அஜித்துக்கு ‘வி’ எனும் எழுத்து டைட்டிலின் துவக்கமாக அமையும் படமானது அதிர்ஷ்டத்தை தரும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. வீரத்தின் ஹிட் வேதாளம் பெறவில்லை, வேதாளம் அளவுக்கு விவேகம் தம் பிடிக்கவில்லை, விவேகத்தை விட நிச்சயம் படு மோசமாகதான் விஸ்வாசம் இருக்கும்!

* ரஜினியுடன் மோதும் மாஸ் நடிகர்களின் படங்கள் நிச்சயம் தோல்வியையே தரும். கமல் படாத அடிகளா?...

* சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கும் அஜித்துக்கும் பொருத்தம் சரியில்லை! ....இப்படியாக விஸ்வாசத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் லைட்மேன் வரை அத்தனை விஷயங்களையும் எடுத்து வைத்து ‘நெகடீவ் சென்டிமெண்டுகளை’ உருவாக்கி, விஸ்வாசம் தோற்கும்! தோற்கும்! என்று கதறினார்கள். ஆனால் ரிசல்டோ தெறிக்கவிட்டிருக்கிறது!