நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர், ஹெலி டிசைனர், மெக்கானிக் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் நடிகர் அஜித். இந்தநிலையில், எம்.ஐ.டி. மாணவர்களின் ஆளில்லா விமானம்  உருவாக்குதலில் ஆலோசகராக முக்கிய பங்கு வகித்து வருகிறார். எம்.ஐ.டி. மாணவர்கள் மருத்துவ உதவிகளுக்கான ஆளில்லா விமானத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். 

அந்த குழுவுக்கு  தக்‌ஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. தக்‌ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த தக்‌ஷா ட்ரோன் அதிக நேரங்கள் பறந்து ஏற்கனவே சாதனை படைத்திருந்தது. தக்‌ஷா குழுவின் ஆலோசகராக பணியாற்ற ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் அஜித். 

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகெங்கிலும் இருந்து 55 ஆளில்லா விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. 

இதில் தக்‌ஷா விமானம் இரண்டாவதாக இடம் பிடித்தது. போட்டி என்னவென்றால், ரத்த மாதிரியை ஒரு இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்பதுதான். அதில் தக்‌ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் என்ற விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்‌ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது. 

இரண்டாமிடம் மற்ற இரண்டு தேர்வுகளில் தக்‌ஷா குழு சற்று குறைவான மதிப்பெண் எடுத்ததனால் 116.55 புள்ளிகளுடன் மோனாஹ் விமானம் முதலிடத்தையும், 115.70 புள்ளிகளுடன் தக்‌ஷா விமானம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. தக்‌ஷா விமான போட்டி நடைபெற்ற போது, நடிகர் அஜித், விஸ்வாசம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால்,  அவர் கலந்து கொள்ளவில்லை.