தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள அஜித், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

இந்நிலையில் சினிமா துறையில் தொழில் ரீதியாக அஜித் பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அஜித் சார்பில் அவருடைய வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அஜித் குமார் அவர்களின் அதிகார பூர்வ சட்ட ஆலோசகர் இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும்.

.சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் காட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற மக்கள் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

மேலும்‌ தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும்‌ அணுகினால்‌ அந்த தகவலை  சுரேஷ்‌ சந்திரா அவர்களிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும்‌ என்றும்‌ வேண்டுகோள்‌ விடுக்கிறார்‌. இதை மீறி இத்தகைய நபர்களிடம்‌ தன்‌ சம்பந்தமாக யாரும்‌ தொழில்‌ மற்றும்‌ வர்த்தக ரீதியாக தொடர்பில்‌ இருந்தால்‌, அதனால்‌ ஏதேனும்‌ பாதகம்‌ ஏற்பட்டால்,‌ அதற்கு என்‌ கட்சிக்காரர்‌, எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும்‌, இத்தகைய நபர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌படி கேட்டுக்‌ கொள்கிறார்‌. என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.