தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படம் மூலம் தமிழுக்கு வந்தது. தற்போது மகேஷ்பாபு ராணுவ அதிகாரியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்த படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மகேஷ்பாபு, குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு டூர் கிளம்பினார். அதனால் சில மாதங்களுக்கு சினிமாவில் நடிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் குடும்பத்துடன் சுற்றி வரும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதனிடையே மகேஷ்பாபு அமெரிக்கா சென்றதற்கான உண்மையான தகவல் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. 

2014ம் ஆண்டு அகடு என்ற படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், மகேஷ் பாபுவிற்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் ஆப்ரேஷனை தள்ளிப்போட்டு வந்துள்ளார் மகேஷ்பாபு. 

இந்நிலையில் அந்த இடத்தில் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதனால் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.