தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த திஷா கடந்த 27ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் திஷாவை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த குற்ற சம்பவம் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட சாமானியர்கள் வரை அனைவரையும் கொதிப்படையச் செய்தது.

 

இதனிடையே விசாரணைக்காக திஷா எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்றவர்களை என்கவுண்டரில் போலீசார் சுட்டுத் தள்ளினர். இதனை கேள்விப்பட்ட தெலங்கானா மக்கள் என்கவுண்டர் நடத்திய போலீசாரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த செய்தியை கேள்விப்பட்ட தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவையும், மகிழ்ச்சியையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தெலுங்கு திரையுலகின் நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். டோலிவுட்டின் முன்னணி ஸ்டாரான நாகர்ஜுனா, இன்று காலை நீதி வென்றது என்ற செய்தியுடன் எழுந்துள்ளேன் என என்று பதிவிட்டுள்ளார். 

 

அவரது மருமகளும், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையுமான சமந்தா, ஐ லவ் தெலங்கானா போலீஸ், பயம் ஒரு சிறந்த தீர்வு மற்றும் சில சமயங்களில் ஒரே தீர்வாக அமைகிறது என்று கூறிப்பிட்டுள்ளார். 

 

முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் ஆகியோர் நீதி வென்றது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இதனிடையே #JusticeForPriyankaReddy, #Encounter, #TelanganaPolice போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.