கொரோனாவின் கோரதண்டவம் காரணமாக முடங்கி கிடந்த திரையுலகம் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் சின்னத்திரை படப்பிடிப்பில் தொடங்கி தற்போது வெள்ளித்திரை வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. 

மலையாளத்தில் பிரபல நடிகரான பிரித்விராஜுக்கு சமீபத்தில்  'ஜன கண மன' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது அனைத்துப் படக்குழுவினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தார்கள்.அதில் நடிகர் பிரித்விராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்ட பிரித்விராஜ் தற்போது உடல் நலத்துடன் உள்ளார். 

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வந்த ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சிரஞ்சீவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சிரஞ்சீவி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எதிர்பாராதவிதமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தயவு செய்து  கடந்த 5 நாட்களாக என்னை சந்தித்த அனைவரும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். பூரண குணமடைந்துவிட்டேன் என விரைவில் பதிவிடுகிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் சிரஞ்சீவி விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.