'பெங்களூரு அரசுப்பள்ளிகளில் அவ்வப்போது ஸ்பெஷல் டீச்சராக கிளாஸ் எடுத்து வந்த நடிகை பிரணிதா தற்போது ஒரு அரசுப் பள்ளியை முழுமையாக தத்து எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

நடிகை பிரணிதா, தமிழில் 'உதயன்', ‘சகுனி’, ‘மாசு என்கிற மாசிலாமணி', ‘எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, ஜெய், அருள்நிதி போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த படங்கள் தமிழில் பெரிய அளவுக்கு ஹிட் ஆகவில்லை.

 

தெலுங்கிலும் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான சிவ்ராஜ் குமார் போன்றவர்களுடன் தொடர்ந்து நடித்துவந்தார். தற்போது அங்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் ஒரு முக்கியமான விஷயத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். 

கர்நாடகா மாநிலத்தில் அவருடைய சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றைத் தத்தெடுத்திருக்கிறார். பெங்களூரு அருகில் உள்ள ஹசன் என்ற ஊரில் அந்த அரசுப் பள்ளி உள்ளது. 2017ஆம் ஆண்டு பிரணிதா முதன்முறையாக அரசாங்கப் பள்ளியில் தன்னார்வலராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில் பள்ளியின் சுற்றுச்சூழல், குழந்தைகளின் கல்வித்திறன் திருப்தி அளிக்காமல் இருந்துள்ளது. ஏழாவது படிக்கும் மாணவனுக்கு ஆங்கில மொழி தெரிந்திருக்கவில்லை.  

இவையெல்லாம் பார்த்த பிரணிதா அந்தப் பள்ளியை தத்தெடுத்ததோடு மட்டுமல்லாமல், கழிப்பறைகள் கட்டுவதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.ஹசன் என்ற ஊரில்தான் பிரணிதாவின் தந்தை பிறந்தவர். வேலை காரணமாக பெங்களூருக்குக் குடிபெயர்ந்து இன்று வளர்ச்சி அடைந்திருந்தாலும், தங்களது வேரைத் தேடி மீண்டும் அந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கான முன்னெடுப்புகளில் இறங்கியிருக்கும் பிரணிதாவின் செயலுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனது நண்பர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் பிரணிதா. லவ் யூ பிரணிதா டீச்சர்.