போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்ததோடு மாறுவேடத்தில் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜியை ஆந்திர போலீஸார் விமான நிலையத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.

 பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜியை தனியார் நிறுவன மீடியா வழக்கில் போலீசார் 3 முறை விசாரணைக்கு அழைப்பு விடுத்தும் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகர் சிவாஜி நேற்று முன்தினம்  ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தார். ஆனால், ஐதராபாத் போலீசார் ஏற்கனவே சிவாஜிக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் சிவாஜி அமெரிக்கா செல்ல இருப்பது குறித்து சைபராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து, விமான நிலையம் வந்த போலீசாருக்கு, சிவாஜி யாருக்கும் தெரியாமல் இருக்கும் விதமாக மொட்டை அடித்து மீசை இல்லாமல் டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பிச்செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து உடனே  சிவாஜியை சைபராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கு 41 சிஆர்பிசியின் கீழ் வழக்குப்பதிந்து நோட்டீஸ் வழங்கி வரும் 11ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வெளிநாடுகளுக்கு  தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிவாஜியின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்தனர்.  வழக்கு விசாரணையின்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சிவாஜி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.