ஏற்கனவே படத்தின் ரிசல்ட் குறித்து தயாரிப்பாளர் தரப்பு,விஜய், இயக்குநர் அட்லி ஆகியோர் மிகவும் நொந்துபோய் இருக்கும் நிலையில் சர்வ மகா சக்தி படைத்த தமிழ் ராக்கர்ஸ் ‘பிகில்’படத்தை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது வெறித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

180 முதல் 200 கோடி பட்ஜெட்டுக்குள் தயாரிக்கப்பட்ட பிகில்’ படம் நேற்று வெளியாகி மகத்தான வசூலைப் பெற்றுவருகிறது. ஆனால் படம் குறித்த விமர்சனங்கள் மிகவும் கலவையாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களின் காட்சிகளை சுட்டு ஒரே படத்தில் இயக்குநர் அட்லி தந்திருப்பதாக வலைதள விமர்சகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். ஆனால் அந்த விமர்சனங்களையெல்லாம் மீறி முதல் நாள் வசூல் பிரம்மாண்டமாக இருந்ததாகவே தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கமாக தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை கொஞ்சமும் இரக்கமின்றே நேற்றே தனது இணையதளத்தில், அதுவும் ஹெச்.டி.பிரிண்டில் வெளியிட்டுவிட்டது.இதனால் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் வட்டாரம் கதி கலங்கிப்போயுள்ளது. தமிழக தியேட்டர் உரிமை மட்டும் 80 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதால் அந்த வசூலில் பாதியையாவது இப்படம் எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸின் இந்த அட்ராசிட்டியைக் கண்டு சக தயாரிப்பாளர்களும் கொதித்துப்போய் உள்ளனர்.