கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக முடங்கியது. இந்நிலையில், திரைத்துறையை நம்பி வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த, சில நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது.

இதுகுறித்து மே 21 தேதி, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தாவது,  சீரியல் பணிகள் வெளியிடங்களிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலும் நடைபெற கூடாது. வீட்டின் உள்ளேயோ... அல்லது அரங்கத்திற்குள் தான் படபிடிப்புகள் நடத்தப்பட வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் நடிகர் - நடிகைகளை தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எந்நேரமும் மாஸ்க் அணிய வேண்டும். ஷூட்டிங் நடக்கும் இடத்தை, இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக விலகலை கடைபிடித்து பணியாற்ற வேண்டும். அதே போல் ஷூட்டிங் பார்ப்பதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது, என்றும் 20 பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன் (மே 26 ஆம் தேதி அன்று)  நடிகை குஷ்பு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சிலர் செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம்,எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கூடுதல் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்தனர்.

அரசு குறிப்பிட்டபடி, 20 பணியாளர்களுடன் படப்பிடிப்பை நடத்த முடியாது என்றும் அதனால் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளித்து, குறைந்த பட்சம் 50 பணியாளர்களுக்கு மேல் வேலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும்,  இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் 3000 பணியாளர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை, அமைச்சர் கடம்பூர் ராஜு முதலமைச்சரிடம் கூறி, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். 

இதை தொடர்ந்து தற்போது,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  சின்னத்திரை படப்பிடிப்பை அதிகபட்சமாக 60 பேர்கள் கொண்டு நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 60 பேர் கொண்டு படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதே போல் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றாலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு சின்ன தொடரின் படப்பிடிப்புக்கும் ஒரு முறை மட்டுமே அனுமதி பெற்றால் போதுமானது என்றும் முதல்வர் கூறியுள்ளார். 

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு சின்னத்திரை தயாரிப்பாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.