சினிமாவுக்கு வந்த பிறகு தனது சொந்த ஊரின் பெயரைக் கூட சொல்லத் தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் வில்லன் நடிகர் சவுந்தரராஜா, ’நம்ம ஊருக்கு நாமதான் இறங்கி வேலை செய்யணும்’என்ற அறிவிப்போடு, தனது சொந்த ஊரான உசிலம்பட்டியின் 50 ஏக்கர் கண்மாயை தூர்வாரக் கிளம்பியிருக்கிறார். இவருடன் சில சமூக ஆர்வலர்களும் கைகோர்த்திருக்கிறார்கள்.

இது குறித்து தனது சுதந்திரச் செய்தியில் குறிப்பிட்டுள்ள சவுந்தர ராஜா,...உறவுகள் அனைவருக்கும் 73 வது சுதந்திர தின வாழ்த்துக்களுடன்., என்னுடைய மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவில் நான் பிறந்த சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 500 பணை மரங்களை நட்டு எங்க ஊரு நீர் ஆதாரமாக இருக்கும் கண்மாயை அரசாங்க அனுமதியோடும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் சுத்தம் செய்து தூர்வாரும் பொறுப்பை எடுத்துளேன். எல்லா ஊரிலும் எல்லோரும் இதை செய்தால் நீர் நிலைகள் காப்பாற்றப்படும். தண்ணீர் பஞ்சம் வராது. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு  பனை விதைகளை நட்டார்.

 இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், ’எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்’என்று அவர் கூறினார். மற்ற நடிகர்களும் இப்படி சொந்த மண்ணுக்காக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?