தமிழ் பட உலகில் திருட்டு தனமாக திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சமீப காலமாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை திருட்டு தனமாக வெளியிடுவதை தடுக்க கோர்ட்டில் தடை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் இவற்றை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, செல்போனில் படம் எடுப்பதை தடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டது. 

இந்நிலையில் தனுஷ் - சாய்பல்லவி நடித்துள்ள மாறி - 2  திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தை இணையதளங்களில், வெளியிட தடை விதிக்கும் படி தனுஷின் வுண்டர்பார் பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மாரி- 2  படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். 16 ஆயிரத்து 135  இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இப்படி தடை வாங்கிய தனுஷை அதிர்ச்சியாக்கும் விதமாக திரைப்படம் ரிலீஸ் ஆன இன்றே, மாரி 2 , கனா, அடங்கமறு, சிலுக்குவார் பட்டி சிங்கம், துப்பாக்கி முனை,  உள்ளிட்ட ஆறு படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக அதுவும் HD ப்ரிண்டில் வெளியிட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.