உலகையே உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் திரைத்துறையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 19ம் தேதி முதலே அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். என்ன தான் சினிமாவில் சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் செய்தாலும், 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர என்டர்டெய்மெண்ட். 

சினிமாவைப் போலவே கொரோனாவால் சீரியல்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. சீரியலில் சினிமாவை போல் இந்த வாரம் இல்லை என்றால், அடுத்த வாரம் ரிலீஸ் என்று அறிவிக்கும் வாய்ப்பே இல்லை. எப்போதும் குறிப்பிட்ட நாட்களுக்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஷூட் செய்து வைத்திருப்பார்கள். ஏற்கனவே ஷூட் செய்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்த சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகிவிட்டன. 

கையில் ஒன்றுமில்லையே என வாடி நின்ற தொலைக்காட்சிகள் பலவும், ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த எபிசோட்டை திரும்ப ஒளிபரப்புவது, பழைய ரியாலிட்டி ஷோக்களை தூசி தட்டி போடுவது என்று ரசிகர்களை பொழுது போக்கி வருகின்றனர். அப்படித் தான்  சன் டி.வி.யில் மெட்டி ஒலி, தங்கம் மற்றும் தூர்தர்ஷனில் ராமாயணம் ஆகிய தொடர்கள் டி.ஆர்.பி.யில் பட்டையைக் கிளப்பி வருகிறது. வியூஸ் அதிகம் என்றாலும் எவ்வளவு நாட்களுக்கு தான் மக்கள் பார்த்த சீரியலையே பார்ப்பார்கள். அதுமட்டுமின்றி சின்னத்திரையை மட்டும் நம்பி இருக்கும் தொழிலாளிர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுகிறது.

அதனால் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த குஷ்பு, மீண்டும் சீரியல் ஷூட்டிங்குகளை தொடங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்துவோம் என்று உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே...  தமிழக அரசு , சின்னத்திரை மாற்று வெள்ளித்திரைக்கு போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளுக்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் (மே 22 ) முதல் சீரியல் பணிகளை துவங்க அனுமதி கொடுத்துள்ளது. 

நிபந்தனைகளோடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, " சீரியல் பணிகள் வெளியிடங்களிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலும் நடைபெற கூடாது. வீட்டின் உள்ளேயோ... அல்லது அரங்கத்திற்குள் தான் படபிபிடிப்புகள் நடத்தப்பட வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் நடிகர் - நடிகைகளை தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எந்நேரமும் மாஸ்க் அணிய வேண்டும். ஷூட்டிங் நடக்கும் இடத்தை, இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக விலகலை கடைபிடித்து பணியாற்ற வேண்டும், அதே போல் ஷூட்டிங் பார்ப்பதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால்... அடுத்த வாரங்களில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது... விட்ட சீரியலை மீண்டும் பார்ப்பது என்றால் இல்லத்தரசிகளுக்கு சந்தோசம் தானே...