சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 110 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹாலிவுட்டையே ஆட்டிபடைக்கும் கொரோனா அச்சம் கோலிவுட்டையும் சும்மா விடவில்லை. ஏற்கனவே வருகிற 19-ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, திரைப்படம், சீரியல் மற்றும் வெப் சிரீஸ் என அனைத்து வகையான பொழுதுபோக்கு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக மும்பையில் நடைபெற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சம்மேளனம் அறிவித்திருந்தது. இதனை அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளை ரத்து செய்வது தொடர்பாக சென்னையில் பெப்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மார்ச் 19ம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்திவைப்படுவதாக அறிவித்தார். பல தொழிலாளர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நடைமுறை மார்ச் 19 முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றாலும் கொரோனா பீதியால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனால் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, அஜித் நடிக்கும் வலிமை உள்ளிட்ட 75 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திப் படப்பிடிப்புகள் மார்ச் 19 முதல்  மார்ச் 31 வரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தெலுங்கு, மலையாளப் படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.