இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை காப்பதற்காக நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை தடுப்பதற்காக சில தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோலிவுட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள படங்களின் ஷூட்டிங்குகளை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அதில்,  "தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.

தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம். 11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் டி.சிவா, இயக்குநர் மனோபாலா, பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே. சதிஷ் குமார், தனஞ்செயன், ஆர்.கே.சுரேஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.