நயன்தாரா நடித்த ‘அறம்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கே.ஜே ராஜேஷ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ‘அறம்’ படத்தை தயாரித்தார். தனது முதல் படத்தையே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து தயாரித்து இருந்தார். இந்தப் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்த ‘குலேபகவாலி’ படத்தை தயாரித்திருந்தார்.

தொடர்ந்து ‘ஐரா’, ‘ஹீரோ’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘டிக்கிலோனா’, ‘டாக்டர்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இவர் கடைசியாக தயாரித்த, வைபவ் மற்றும் பார்வதி நாயர் இணைந்து நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வெளியிடப்படாமல் உள்ளது. கே.ஜே ராஜேஷ் படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி, படங்களின் உரிமையை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அஜித் நடித்த ‘விசுவாசம்’ சல்மான்கான் நடித்த ‘தபாங் 3’, ‘தும்பா, ஆகிய படங்களை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டு வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷிற்கு நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் உதவியாளர் ஜே.பி.தென்பாதியான் இயக்கியுள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு 'அங்கீகாரம்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.