நடிகர் கமலஹாசன் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார் என்றும், அமைச்சர்களுக்கும் அவருக்குமான பிரச்சனையில் தமிழ் திரையுலகமே அவருக்குப் பின்னால் நிற்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் , அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இது குறையும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தெளிவானவர். விஷயங்கள் தெரிந்தவர். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நடிகர் சங்கம் அவருக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் யாருக்கு ஆதரவு? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இருவரும் அரசியலுக்கு வருவதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை அப்படி அறிவித்தால்,  அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? என்று சொல்கிறேன் என்றும் விஷால் தெரிவித்தார்.

சினிமாவுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தால் திரையுலகுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி இருக்கிறோம். வருகிற 24-ந்தேதி இதுகுறித்து அரசு குழுவினருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. அப்போது எங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் விஷால் தெரிவித்தார்.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், உணவு பண்டங்கள் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என்று படம் பார்க்க வருபவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது. கட்டணங்களை குறைத்து ரசிகர்கள் அதிகமாக படம் பார்க்க வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் விஷால் கூறினார்.