தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த திஷா கடந்த 27ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் திஷாவை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த குற்ற சம்பவம் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட சாமானியர்கள் வரை அனைவரையும் கொதிப்படையச் செய்தது. 

இதனிடையே விசாரணைக்காக திஷா எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்றவர்களை என்கவுண்டரில் போலீசார் சுட்டுத் தள்ளினர். இதனை கேள்விப்பட்ட தெலங்கானா மக்கள் என்கவுண்டர் நடத்திய போலீசாரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தீயாய் பரவி வரும் இச்செய்தி குறித்து திரைப்பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

ஐதராபாத் என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா, "அவர்கள் எளிதில் இறந்துவிட்டனர். பெண்களை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

 

"இறுதியாக நீதி வென்றது, தெலங்கானா காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றி" என விஷால் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

 

"இறுதியாக நீதி வழங்கப்பட்டது, ஆனால் இதுபோதாது. பாலியல் வன்கொடுமை செய்யும் ஒவ்வொருவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும். இதுபோன்ற தண்டனைகள் மட்டுமே பெண்களை கற்பழிக்கும் பைத்தியக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும். இதை சட்டமாக்குங்கள்" என்று பதிவிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். மேலும் அந்த டுவிட்டர் பதிவை பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார். 

 

"இதற்கு பெயர் தான் நீதி" என்று நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திஷாவிற்கு நீதி வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ட்விட்டரில் #JusticeForDisha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.