மேட்ரிமோனியல் மூலம் திருமண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி, தன்னை மிரட்டிய இளைஞரின் வீடியோவை வெளியிட்டார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த இளம் நடிகை ஸ்ருதி, வசதிபடைத்த இளைஞர்களிடம் திருமண ஆசைகாட்டி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கோவையைச் சேர்ந்த இளம் மென்பொறியாளர்களை மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட நடிகை ஸ்ருதி, அவர்களைத் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் நடிகை ஸ்ருதி, அவரது வளர்ப்புத் தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அவர், சிறைத்துறை அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், நிர்வாணமாக நிற்கவைத்து கேவலப்படுத்தியதாகவும், அடுக்காக புகார் கூறினார். மேலும், தன் மீது பண மோசடி புகார் செய்த நபர் தன்னை காதலிக்க வலியுறுத்தி, தற்கொலை மிரட்டல் விடுத்த வீடியோக்களையும் நடிகை ஸ்ருதி வெளியிட்டுள்ளார். அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலேயே, அவர் தன்மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும் நடிகை ஸ்ருதி கூறியுள்ளார். 
 
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ஸ்ருதி, தன் மீது பண மோசடி புகார் அளித்த அமுதன் என்ற இளைஞர் தன்னை எப்படியெல்லாம் போலியாக மிரட்டினார் என்ற வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோவில், ஸ்ருதி தன்னை காதலிக்காவிட்டால், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும், தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டும் இளைஞர் அமுதன் காணப்படுகிறார்.

அந்த இளைஞரை தான் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், தன் மீது பண மோசடி செய்ததாக, பொய் புகார் அளித்துள்ளார் என்று கூறிய நடிகை ஸ்ருதி, சிறையில் இருந்த காவலர்களையும் கடுமையாக சாடினார். தன் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறிய ஸ்ருதி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவல்துறையினர் மீதும் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.