சில நடிகைகள் பல வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டு, சில கருத்து வேறுபாடு காரணமாக... கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். வருடம் தோறும் நடிகைகள் விவாகரத்து பெறுவது அதிகரித்து கொண்டே போவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தன்னுடைய முதல் திருமணம் குறித்தும் கணவர் பற்றியும், மலையாள நடிகை சுவேதா மேனன் மனம் திறந்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன், பாலிவுட் மாடல் பாபி போன்ஸ்லே என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, பாபியை விவாகரத்து செய்த சுவேதா மேனன், கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீவல்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இந்த தம்பதிக்கு சபைனா மேனன் எனும் பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், தனது முதல் திருமணம் ஒரு கசப்பான அனுபவம் என சுவேதா மேனன் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாபியுடனான எனது முதல் திருமணம், என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு. அதுபோன்ற ஒரு திருமணம் நடந்திருக்கவே  கூடாது. எனது தந்தை ஒரு கடுமையான நபராக இருந்திருந்தால், அந்த திருமணம் என் வாழ்வில் இடம்பெற்றிருந்திருக்காது. அவர் என் ஆசைக்கு முக்கியத்தும் கொடுத்து நடந்து கொண்டார் அது தான் தவறோ என்று கூட இப்போது தோன்றுகிறது.

குழந்தை போல் சுதந்திரமாக வாழ நான் போராடினேன்  ஆனால் அது கனவாக மட்டுமே போய் விட்டது.  என்னைப் போன்ற ஒரு பெண், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டிருப்பதை என் பெற்றோர் ஒருபோதும் விரும்பியதில்லை.

நான் வேலைக்கு சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.

மும்பையில் மாடலிங் மற்றும் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், என் பெற்றோர் என்னை வழிநடத்த என்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் தனிமையிலேயே தான் பொழுதை கழிப்பேன். அது தான் என்னை முதன் முதலில் காதலில் விழ தூண்டியது.

நான் பாபியை திருமணம் செய்துகொள்ள பிடிவாதம் பிடித்தபோது என் தந்தை என்னிடம், நீ வாழ்வில் வருத்தப்பட போகிறாய் என்று கூறினார். மேலும் மும்பையில் நடந்த என் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த அவர், என்னிடம் எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம் என்று கூறினார்.

இப்போது அந்த தருணத்தை நான் நினைக்கையில், எனது திருமணம் விவாகரத்து வரை வரப்போகிறது என்பதை அவர் முன்பே அறிந்திருப்பார் என்பதை உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விவாகரத்து குறித்து வெளியான வதந்திகள் பற்றி சுவேதா மேனன் கூறுகையில், ‘ஆரம்பத்தில் அதுபோன்ற செய்திகளுக்கு பதிலளித்தேன். இப்போது அவற்றிற்கு சிரிக்க கற்றுக்கொண்டேன். எனது விவாகரத்திற்கு மக்கள் காத்திருப்பது போலவே இப்போதும் போலியான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.