திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் செட்டில் ஆன நடிகைகள் முதல், சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகைகள் வரை, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்கள். 

அந்த வகையில் 'தல' , 'தளபதி' என இருவருடனும் 90 களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஸ்வாதியும், நல்ல கதை அமைந்தால், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

1995 ஆண்டு தளபதி விஜய் நடித்த 'தேவா' படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானவர், நடிகை ஸ்வாதி பின் 'வசந்த வாசல்', 'செல்வா' என விஜயுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும்  தல அஜித்துடன் 'வான்மதி' படத்திலும் நடித்துள்ளார். 

தமிழை தவிர சில பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானார். 

தமிழில் கடைசியாக இயக்குனர் அமீர், இயக்கி நடித்த 'யோகி' படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து 10 வருடங்களாக தமிழ் திரையுலகின் பக்கமே வராமல் ஒதுங்கி இருந்த ஸ்வாதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது... "நான் திரைப்படங்கள் நடித்து பல ஆண்டுகள் ஆகியும்,  தமிழ் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும், எப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பீர்களா என கேட்கிறார்கள்? 

பல சமயங்களில் நான் மேக்கப் இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். சமீபத்தில் நான் வெளியூருக்கு சென்றபோது ஒரு தம்பதியரை சந்தித்த பின், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். 

நான் நடிப்பதற்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு கொடுப்பார்கள். மேலும் மும்பை விட தற்போது சினிமாவில், நவீன தொழில்நுட்பங்கள் அதிகமாக வந்துவிட்டது. பாகுபலி போன்ற படங்கள் உலக அளவில் பேசவைத்தது. தற்போதும் சினிமாவை அதிகம் நேசிக்கிறேன். தமிழில் நல்ல கதை அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.