சென்னை திருவான்மியூரில் சூர்யா நடிப்பில் கேவிஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கவிஞர் கபிலன் , புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய பேச்சு ஆளும் அரசியல் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது நியாயமான கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தால் அது பிரதமர் மோடியின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என கூறினார்.

இதைத் தொடர்ந்து விழாவில்  பேசிய ரஜினிகாந்த்,  புதிய கல்விக் கொள்கை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பலரும் என்னை கேட்கின்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சூர்யா பேசியுள்ளார். 

அவர் மிகச்சரியாக பேசியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நான் ஆதரிக்கிறேன் என ரஜினி கூறியபோது அரங்கமே அதிர்ந்தது. விசில் சப்தம் விண்ணை பிளந்தது.

தொடர்ந்து பேசிய ரஜினி, அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்து வருபவர் சூர்யா. அவருக்கு மாணவர்களின் கஷ்டம் தெரியும். எனவே அவர் சரியாகத்தான் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுவிட்டது. எனவே நான் பேசித்தான் மோடிக்கு கேட்க வேண்டும் என்பது இல்லை என்று ரஜினிகாந்த் அதிரடியாக பேசினார்.