’காப்பான்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு  வந்திருந்து, தனது வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத ஒரு சப்போர்ட்டை வழங்கியதற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து ட்விட் பண்ணியுள்ளார் நடிகர் ‘அகரம்’ சூர்யா.

மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்த சர்ச்சையில் நடிகர் சூர்யா சிக்கியுள்ள நிலையில் நேற்று நடந்த அவரது ‘காப்பான்’பட விழாவை ரஜினி தவிர்ப்பார் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால் படவிழாவில் கலந்துகொண்டதோடு,’ புதிய கல்விக் கொள்கை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பலரும் என்னை கேட்கின்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சூர்யா பேசியுள்ளார். 

அவர் மிகச்சரியாக பேசியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நான் ஆதரிக்கிறேன். அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்து வருபவர் சூர்யா. அவருக்கு மாணவர்களின் கஷ்டம் தெரியும். எனவே அவர் சரியாகத்தான் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுவிட்டது. எனவே நான் பேசித்தான் மோடிக்கு கேட்க வேண்டும் என்பது இல்லை என்று ரஜினிகாந்த் அதிரடியாக பேசினார்.

ரஜினியின் அந்த பேச்சுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டமைக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட சூர்யா,...அன்புள்ள ரஜினி சார்..உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு..நன்றி’என்று குறிப்பிட்டுள்ளார்.