தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூர்யா - ஜோதிகா தம்பதிகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’, ‘உயிரில் கலந்தது’ ஆகிய படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் படங்களில் பணியாற்றி வரும் பொழுது காதல் மலர்ந்தது. பின்னர் 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.

குழந்தைகளை மும்பை பள்ளியில் படிக்க வைக்கும் சூர்யா
தியா மற்றும் தேவ் இருவரின் பள்ளி படிப்பிற்காக சூர்யாவும் ஜோதிகாவும் சென்னையிலிருந்து மும்பைக்கு குடிப்பெயர்ந்தனர். சூர்யா ஜோதிகாவின் இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழகத்தில் பல நல்ல பள்ளிகள் இருக்கும் பொழுது மும்பைக்கு குடிபெயர வேண்டிய அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பினர். இருப்பினும் தொடர்ந்து தனது பிள்ளைகளை மும்பையில் உள்ள பள்ளியிலேயே சூர்யா படிக்க வைத்து வருகிறார்.

பள்ளிப்படிப்பை முடித்த சூர்யா ஜோதிகா மகள் தியா
இந்த நிலையில் சூர்யாவின் மூத்த மகள் தியா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. கையில் சான்றிதழ்களுடன் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் என ஒட்டு மொத்த குடும்பமும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தியா அப்படியே ஜோதிகா போலவே உள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் தியாவுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
