சூர்யா - ஜோதிகாவின் மகன் தேவ், ஒரு படத்தில் ஹீரோவாக, அதாவது அவரை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. 90 களில், முன்னணி நடிகையாக இருந்த இவர்,  திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனிப்பதற்காக சில ஆண்டுகள் திரைத்துறையிலிருந்து விலகியே இருந்தார்.

குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ஜோதிகா, கடந்த 2015 ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் தயாரிப்பில், ' 36 வயதினிலே'  படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

முதல் படமே ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.  

அந்த வகையில் இவர் நடிப்பில் மகளிர் மட்டும்,  நாச்சியார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான 'காற்றின் மொழி' திரைப்படத்திற்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதேபோல் நடிகர் சூர்யாவும் அவர் பாணியில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  விரைவில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் என் ஜி கே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகனை படத்தில் நடிக்க வைக்க அறிமுக இயக்குனர் ஒருவர் சூர்யா - ஜோதிகாவை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளாராம்.  இது ஒரு சிறுவனுக்கும் நாய்க்குக்கும் இடையே உள்ள பாசத்தை விளக்கும் படம் என கூறப்படுகிறது. 

இந்த படத்தின் கதை, சூர்யா - ஜோதிகா ஆகிய இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தாலும், தற்போது தங்களுடைய மகன் சிறுவனாக இருப்பதால் தன்னுடைய மகனை, படத்தில் நடிக்க வைக்கலாமா?வேண்டாமா? என யோசித்து வருகிறார்களாம்.  ஆனால் கதை பிடித்திருப்பதால், ஒருவேளை இந்த படத்தில் தேவ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது