தனது அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா கல்வி குறித்து எவ்வளவோ விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவரது ரசிகர்கள் தமிழைக்கூட ஒழுங்காக எழுதத் தெரியாத தற்குறிகளாகத்தான் இருக்கிறார்கள் என்று ஒரு இன்ஸ்பெக்டர் தனது முகநூல் பக்கத்தில் மானத்தை வாங்கியிருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று  ஞாயிறன்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஆர்ப்பாட்டத்துடன்  ஊர்வலமாகச் சென்றனர்.

அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, “முன் அனுமதி வாங்காமல் இது போன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்கக் கூடாது என்று அறிவுரை கூறியதோடு, ‘இனிமேல் அப்படிச் செய்ய மாட்டோம்’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

கடிதம் எழுதிய 6 பேரும் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ‘ஆய்வாளர்’ என்பதை ‘ஆவ்யாளர்’னு எழுதிருக்கான்.“மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதைப் படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது” என தனது பேஸ்புக் பக்கத்தில் ஆய்வாளர் அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.அந்தக் கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள்.இப்படியே நிலைமை போனால் யார் ‘காப்பான்’ இவர்களையும் இவர்களின் தமிழையும்…? என்று வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.