திரை விமர்சனம்: “சூரரைப் போற்று”கிறார்களா ரசிகர்கள்?... படம் முடியும் போது நிச்சயம் உங்களுக்கு இது தோணும்...!

சூர்யாவின் நடிப்பில் தீபாவளி விருந்தாக வந்திருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் எப்படியிருக்கிறது? 

Suriya soorarai pottru Movie Review

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “சூரரைப்போற்று” திரைப்படம் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கிடையே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் வாங்க...

Suriya soorarai pottru Movie Review

படத்தின் கதை:

பணக்காரர்கள் மட்டுமே ப்ளைட்டில் பயணிக்க முடியும் என்ற விதியை அடித்து நொறுக்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு தான் படத்தின் கதை. அப்பாவுடனான சண்டைக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறும் சூர்யா (நெடுமாறன் ராஜங்கம்) விமானப்படையில் இணைகிறார். அங்கு மிடுக்கான இளம் வீரராக வலம் வருகிறார். இடையில் அப்பா மரணப்படுக்கையில் கிடப்பதாக தகவல் கிடைக்க, கடைசி நேரத்திலாவது அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என ஆவலுடன் ஓடி வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் பணத்திற்கு பிளைட்டில் செல்ல முடியாத நிலை . அதனால்  பல கஷ்டங்கள், நாட்களை கடந்து அப்பாவின் இறுதிச்சடங்கு எல்லாம் முடிந்த பிறகு வீடு வந்து சேர்கிறார். 

சாமானிய மக்களும் ஏன் விமானத்தில் பயணிக்க கூடாது? என நினைக்கும் சூர்யா, குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்காக விருப்ப ஓய்வு பெற்று, தனது இரண்டு நண்பர்களின் உதவியுடன் வேலையை ஆரம்பிக்கிறார். அதற்கு காதல் மனைவி சுந்தரியும்  (அபர்ணா முரளி) உறுதுணையாக நிற்கிறார். விமான நிலையம் ஆரம்பிக்கும் முயற்சியில் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறும் சூர்யாவை, பெரு முதலாளிகள் கூட்டம் எப்படி எல்லாம் சிதைக்கிறது என்பதை கண்ணீர், வலி, அவமானம், போராட்டங்களுடன் கண் முன் காட்டியிருக்கும் படம் தான் ‘சூரரைப் போற்று’.


முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு :

படத்தை தனியொருவராக தூக்கி சுமந்திருக்கிறார் சூர்யா. சிங்கம் படத்தில் ஆக்ரோஷமாக சீறிய சூர்யாவா? இது என ரசிகர்கள் வாய்பிளந்து பார்க்கும் அளவிற்கு, உடைந்து அழவைக்கிறார். பைலட் கதாபாத்திரத்திற்கு படு கச்சிதமாக பொருந்துகிறார். ‘மாறா’ கதாபாத்திரத்தில் வேறு யாரையுமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். 

எத்தனை முறை தொடர் தோல்விகளை சந்தித்தாலும் கனவுகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நிற்கும் மாறாவின் கெத்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

ஒவ்வொரு முறை தோற்று நிற்கும் போதும் சூப்பர் ஹீரோ இமேஜையும் பார்க்காமல் கண்ணீர் விட்டு கதறும் சூர்யாவின் நடிப்பு அபாரம். கண்டிப்பாக சூரரைப்போற்று திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமானதாகவே அமைந்திருக்கிறது. 

அம்மாவாக ஊர்வசி, மனைவியாக அபர்ணா முரளி, அவருடைய சித்தப்பாவாக கருணாஸ், கிராமத்து நண்பனாக காளி வெங்கட், பைலட் நண்பர்களாக விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார் என அனைவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சற்றே பூசினார் போன்ற உடல்வாகும், தமிழ் பெண்களுக்கே உரிய அழகுடனும் வலம் வரும் அபர்ணா முரளி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார். 

எப்ப பாரு சூர்யாவிற்கு பனிஸ்மெண்ட் கொடுத்து வெறுப்பேற்றும் சீனியர் ஆபிசாராக வரும் மோகன் பாபு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் மாஸ் காட்டியிருக்கிறார். இரண்டே காட்சிகளில் படத்தின் திருப்புமுனையாக வந்து ஒட்டுமொத்த கைதட்டுகளையும் அள்ளிக்கொள்கிறார். 

அதேபோல் படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் இசையும், ‘உறியடி’ இயக்குநர் விஜயகுமாரின் வசனமும் வேற லெவலுக்கு தூக்கி நிறுத்தியுள்ளது. ‘இனி ஏர் ஓட்டுறவனும் ப்ளைட்ல பறப்பான்’, ‘வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா... நீ ப்ளைட்ட இறக்குடா நான் பார்த்துக்கிறேன்’ என சூர்யா பேசும் மாஸ் வாசனங்கள் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாது, திரைக்கதைக்கும் பலம் சேர்க்கிறது. 


திரை விமர்சனம்: 

படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும்? யார் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரிடமும் எழும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உடைத்து எறிய போராடும் தனி மனிதனாக சூர்யா மிரட்டியிருக்கிறார். பல இடங்களில் நம்மையும் அறியாமல் மாறா கண்கலங்க வைக்கிறார். “அம்மாவின் காலைப்பிடித்துக் கொண்டு கதறும் போதும்”, “விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் தனது அட்ரஸை துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு பிச்சையெடுக்காத கொடுமையாக பணம் கேட்டு கெஞ்சும் போதும்” “என்ன மனுஷன்யா இவரு?” என கலங்க வைக்கிறார். 

ஒவ்வொரு பிரேமாக படம் நகரும் போதும் நம்மை அறியாமல் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. அடுத்து என்ன? எப்படி இந்த பிரச்சனையை சமாளிப்பார்? அய்யோ போச்சு? அடப்பாவிகளா இப்படி எல்லாமாடா பண்ணுவீங்க? என கோபமும், வருத்தமுமாக படத்தை ரசிக்க முடிகிறது. ஆரம்பத்தில் இருந்த அதே எதிர்பார்ப்பை சற்றும் குறையவிடாமல் இறுதிக்காட்சி வரை கொண்டு சேர்ந்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்ட போது, “இயக்குநர் சுதா கொங்கராவின் உழைப்பை வீணாக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டிருந்தார். அதற்கான காரணம் என்ன என்பதை படத்தை பார்க்கும் அனைவராலும் உணர முடியும். 


நிச்சயம் தமிழில் தயாரிக்கப்பட்ட சிறந்த இன்ஸ்பிரேஷனல் படங்களில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு. படத்தை தியேட்டர்களில் வெளியிட்டிருந்தால் கொண்டாடி தீர்த்திருக்கலாம் என்ற ஒரு குறையைத் தவிர பெரிதாக சுட்டிக்காட்டும் அளவிற்கு எதுவும் இல்லை. கண்டிப்பாக இந்த பாடத்தை பார்த்து முடிக்கும் அனைவர் மனதிலும் இந்த ஒரு கேள்வி வந்து போகும்... அதாங்க...“வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா... நீ ப்ளைட்ட இறக்குடா நான் பார்த்துக்கிறேன்”.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios