ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த பட பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நடிகர் ரஜினி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என உறுதியானது.

இருப்பினும், ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று காலை முடிவு செய்யப்படும் எனவும் அப்பல்லோ மருத்துவனை தெரிவித்தது.

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை சீராகியுள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதித்த மருத்துவர்கள், ரஜினி ஒருவார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும், கொரோனா தொற்று ஏற்படும் சூழலை தவிர்ப்பதுடன் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் லேசான வேலைகளை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ரஜினியை அவரது ரசிகர்கள் கையசைத்து ஆரவாரப்படுத்தினர்.

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் சென்னை வந்தடைந்தார். காரில் இருந்த படியே அனைவரையும் பார்த்து வணங்கிய படி ரஜினிகாந்த் போயஸ் இல்லத்திற்கு புறப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...