ஜெயிலர் படத்தை வரவேற்கும் "அண்ணாத்த குரூப்ஸ்".. திண்டுக்கல்லில் வைக்கப்பட்ட 200 அடி நீள பிரம்மாண்ட போஸ்டர்!
திண்டுக்கல்லில் 200 அடி நீளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் "அண்ணாத்த குரூப்ஸ்" ரசிகர் மன்றத்தினரால் ஜெயிலர் திரைப்படத்தை வரவேற்று ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய 169 திரைப்படமான ஜெய்லர் திரைப்படம் வெளியாவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்பொழுது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திண்டுக்கல்லில், நந்தவனப்பட்டி மேம்பாலத்தில், அப்பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டாரின் "அண்ணாத்த குரூப்ஸ்" என்ற ரசிகர் மன்றம் சார்பாக இத்திரைப்படத்தை வரவேற்று பிரம்மாண்டமான முறையில் 200 அடி நீளம் மற்றும் 8 அடி உயரத்தில் மிகப்பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் "அன்பு என்ற சிறையில் எங்களை ஆயுள் கைதியாக வைத்திருக்கும் எங்கள் ஜெயிலரே வருக.. சரித்திர சாதனை படைக்க வாழ்த்துக்கள்" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட போஸ்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா மற்றும் Hukum ஆகிய இரு சிங்கிள் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியிலும், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படம் விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களும் இந்த படத்திற்காக பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். ஆகவே இந்த படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நெல்சனின் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.