இந்தியாவில் நாளுக்கு நாள் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கோடிகளில் சம்பளம் கொட்டும் கனவு உலகமாக இருந்தாலும், தினக்கூலிக்காக பணியாற்றும் சினிமா தொழிலாளர்கள் தான் அதிகம். 

25 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாகவும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டினால் ஒருவேளை அரிசி கஞ்சியாவது நம்மால் அவர்களுக்கு கொடுத்து முடியும் என தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சி கோரிக்கை விடுத்திருந்தது. 

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித் ஆகியோரும் நடிகைகள் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால் ஆகியோரும் லட்சங்களை வாரிக்கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் தாணு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கிலோ கணக்கில் அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கினர். 

ஏற்கனவே ஃபெப்சி தொழிலாளர்களின் பசியை போக்குவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு உதவு செய்யும் படி முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபெப்சி தொழிலாளர்களை போலவே நலிந்த நடிகர்களுக்கும் சினிமா நடிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தில் உள்ள 1000 நலிந்த கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக 24 டன்கள் மளிகை பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இதேபோன்று கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் இயக்குநர்கள் சங்கத்திற்கும் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்துள்ளார். உதவி என்று வாய் திறந்து கேட்பதற்கு முன்பே ஓடோடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.