சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொடூரமாக தாக்கியதால் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிஸ் ஆகியோர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை... சோகத்தில் முடிந்த அதிர்ச்சியான சம்பவம்...!

இதனிடையே, ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் அவரது நண்பரின் பைக்கிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக தைரியமாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காவல்நிலையம், மருத்துவமனை பெட்ஷுட் என அனைத்திலும் இருக்கும் ரத்த கறைகள் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்தனர் என்பதற்கான சாட்சியமாக கிடைத்துள்ளது. ஓட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது கடும் கண்டனங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

 

ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து இரங்கலோ, கண்டனமோ தெரிவிக்காதது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக அவரது நெருங்கிய நண்பராக அறியப்படும் கராத்தே தியாகராஜன் ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தியிருந்தார். ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துவிட்டு, அந்த குடும்பத்திற்கு இரங்கல் கூறியிருக்கலாம். அதை விட்டு யாரோ ஒருவரைப் போல் ஏன் ஆறுதல் கூற வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தது. 

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள அவர், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத் தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும்.விடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.