தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை தேனாம்பெட்டியில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்பத்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதில் பங்கேற்றார். இந்த இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார். அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவர் அரசியல் பயணங்களைப் பற்றி பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும். இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை. 

குறிப்பாக இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர். என புகழாரம் சூட்டினார்.