ரஜினியின் படத்துக்கு பூஜை போடப்பட்டதுமே, ஆளும் கட்சிகளுக்கு எதிரான சர்ச்சைகளுக்கும் பூஜை போடப்பட்டுவிடும்.  அப்புதிய படத்தில் ஏதோ ஒரு வகையில் ஆளுங்கட்சிக்கு எதிரான விஷயங்களை கொண்டு வந்து முடிச்சுப் போட்டு படத்தை பரபரப்பாக்கிவிடுவார்கள் அரசியல் பிளஸ் சினிமா விமர்சகர்கள். அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ரஜினியின் தர்பார் படத்தையும் அப்படித்தான் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக கோர்த்து விட்டிருக்கின்றனர். அதாவது மும்பையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அரசியல்வாதியின் மகன் அச்சம்பவத்திற்கு பின் தாய்லாந்துக்கு தப்பி சென்றுவிடுகிறான். அவனுக்கு பதிலாக ஆள் மாறாட்ட முறையில் ஒருவனை போலீஸில் காண்பித்துவிடுகிறார்கள்.இந்த மாறாட்டத்தை கண்டுபிடிக்கும் ரஜினி, உண்மை குற்றவாளிக்கு எதிராக எடுக்கும் அதிரடி ஆக்‌ஷன் மூவ்கள்தான் படத்தின் கதையே.இந்த மும்பை சினிமா சம்பவத்தை அப்படியே பாரதிய ஜனதாவுக்கு எதிரான உத்திரபிரதேசத்தின் உன்னாவ் விவகாரத்துடன் முடிச்சுப் போட்டு விடுகிறார்கள் விமர்சகர்கள். ரஜினியை வகையாக பி.ஜே.பி.க்கு எதிராக கோர்த்து விடுகிறார்கள். 

ஆக்சுவலாக ரஜினிகாந்த், மோடி மற்றும் அமித்ஷாவின் ஆதரவாளராகத்தான் இருந்தார். சென்னையில் நடந்த வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட மோடி மற்றும் அமித்ஷாவை ‘கிருஷ்ணர் - அர்ஜூனன்’ என்று புகழ்ந்து, வகையாய் வாங்கிக் கட்டினார். இதன் மூலம் பா.ஜ.க.வின் ஆதாயத்துக்காகத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார், ரஜினி கட்சி துவக்கிய பின் பா.ஜ.க.வைதான் ஆதரிப்பார், ரஜினியை தமிழக பா.ஜ.க.வின் தலைவராக்கிட முயற்சி நடக்கிறது! என்றெல்லாம் விமர்சனங்கள் வெடித்தன. பொன்னார் கூட ஓப்பனாக ரஜினிக்கு அழைப்பும் விடுத்தார். 

இதெல்லாம் இணைந்து ரஜினியை ‘காவி நடிகர்’ ஆக விமர்சித்த நிலையில், ’எனக்கு காவி சாயம் பூசிட சிலர் முயற்சி பண்றாங்க. நான் சிக்கமாட்டேன்’ என்று சொல்லி மோடி - அமித்ஷாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ரஜினி. இதில் கிருஷ்ணர்-அர்ஜூனன் இருவருக்கும் கடும் கோபம் ரஜினி மீது. ஆம் மோடி, அமித்ஷா இருவருமே ரஜினி மீது அப்செட் ஆனார்கள். 

ரஜினியின் பிறந்தநாளுக்கு வழக்கமாக வாழ்த்து கூறும் மோடி அதை தவிர்த்ததில் இருந்தே பா.ஜ.க.வின் ரஜினி மீதான கோபம் வெளிப்பட்டது. இரு தரப்புக்கும் இடையில் இப்போது இணக்கம் இல்லாத சூழலே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ரஜினியின் தர்பார் படம் மோடியின் அரசுடன் மோதுகிறது! என்கிறார்கள். உன்னாவ் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை அம்மாநில பா.ஜ.க. அரசு நினைத்தால் வன்மையாக தண்டிக்கலாம். மத்திய அரசும் இதற்கு உத்தரவிடலாம், ஆனால் அதை செய்யாத மோடியரசை உரசுகிறது தர்பார் படம்! என்றெல்லாம் றெக்கை கட்டுகின்றன விமர்சன பார்வைகள்.